
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தது. துவக்கத்தில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு போகப் போக விறுவிறுப்பானது. இந்த தேர்தலில் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா, அல்லது காங்கிரசா என்பது டிசம்பர் 20 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் முடிந்து நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இம் மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன. இரண்டு கட்சிகளுமே மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. பகுஜன் சமாஜ் கட்சி இந்த தேர்தலில் 66 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து இமாச்சல் லோஹித் கட்சி 36 இடங்களிலும், டி.எம்.சி. கட்சி 25 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 16 இடங்களிலும், இ. கம்யூனிஸ்டு கட்சி 15 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் மற்றும் 105 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.